சனி, அக்டோபர் 15, 2011

போர்ட் வாகனத்தில் தேங்காய் நார் - புதிய தொழில்நுட்பம்


கடந்த இரண்டு வருடங்களாக சுற்று சூழலுக்கு சாதகமான பொருட்களை பயன்படுத்துவதில் போர்ட் வாகன உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   பிரசித்தி பெற்ற இந்த வாகன உற்பத்தியாளர்கள் இதற்க்கு முன் வாகன டஷ்போர்ட் போன்றவற்றை CASTOR OIL நுரையிலும் ,  காரின் உள்பகுதிகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ரெசின் பயன்படுத்தியும் தயாரித்து வந்தனர்.  ஆனால் சமீபமாக இவற்றுக்கு மாற்றாக தேங்காய் நாரை பயன்படுத்தி போர்ட் நிர்வாகம் சில மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது.


தேங்காய் நாரில் இருந்து கதவுகள் , இருக்கை வசதிகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அதனால் நீடித்து உழைக்கும் வாகனங்கள் உருவாக்கப்படுவதோடு எளிதாக மறு சுழற்சி செய்யவும் வைப்பு உண்டாகும்.

இவைகள் மிக குறைந்த எடை உள்ளவைகளாய் இருப்பதினால் ,  எரிபொருள் பயன்பாடு கணிசமான அளவு குறையும் என்பது கூடுதல் தகவல்.    இதே போல் பல சுற்று சூழலுக்கு சாதகமான பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஸ்கி :   வருக ... வருக ... என்று வரவேற்கிறோம்.    விலையை கொஞ்சம் குறைப்பீங்க தானே ....  பார்க்கலாம் ..!

வெள்ளி, அக்டோபர் 14, 2011

உலகின் முதல் மின்சார ஹெலிகாப்டர் - இன்று ஒரு தகவல்


மின்சாரம் உலகில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள நிலையில் மின்சாரத்தை பயன்படுத்தி கார்கள் , ரயில்கள் எல்லாம் ஓட துவங்கி இருக்கிறது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக மனிதன் அமர்ந்து பறக்க கூடிய ஹெலிகாப்டரை மின்சாரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளார் பாஸ்கல் என்ற மின்னியல் மற்றும் விண்வெளி பொறியாளர்.  

இந்த ஹெலிகாப்டரை பாஸ்கல் என்ற தனி மனிதர் ஒருவரே வடிவமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.   பொதுவாக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மேலே எழும்பும்போது அதிகமான சக்தியை எடுத்துகொள்ளும்.  பிரான்சை சேர்ந்த SOLUTION  F  நிறுவனத்தார் இவரை அணுகி 10  நிமிடங்கள் வானத்தில் பறக்கும் ஒரு மின்சார ஹெலிகாப்டரை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டபோது இவர் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. 

இரண்டு காரியங்கள் இவருக்கு தேவைப்பட்டது.  1 .  மிகவும் இலகுவாக இருக்க வேண்டும்.  2 .  அதிநவீன சக்திவாய்ந்த பாட்டரிகள் வேண்டும்.  பல சிறப்பான ச்ச்ய்வுகள் செய்தபின் 7020  அலுமினியம் குழாய்களை வைத்து தன்னுடைய ஹெலிகாப்டரை வடிவமைத்தார்.      160   வாட் / ஹவர்  என்ற சக்தி உடைய   ரீசார்ஜ் செய்ய முடிகிற லித்தியம் அயன் பாலிமர் பாட்டரிகளை உண்டு பண்ணினார்

கிட்டத்தட்ட 12  மாத கடும் உழைப்பிற்கு பிறகு திட்டமிட்டபடி பறக்க துவங்கிய இந்த மின்சார ஹெலிகாப்டர் எதிர்பார்த்த நேரம் அதாவது 10 நிமிடங்கள் பறக்க முடியாவிட்டாலும் 2  நிமிடங்கள் மற்றும் 10  வினாடிகள் பறந்து சாதனை படைத்தது.   இதை தோல்வி என்று  சொல்லாமல் ,   வெற்றியின்  முதல் படி  என்றே  சொல்லுவோம்.

டிஸ்கி :  கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள் .  இதை போல ஒரு ஹெலிகாப்டரை வாங்கி நாம வீட்டு மாடியில் நிறுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா...!  .   அட போயா ... முதலில் மின்சாரத்தை ஒழுங்காக கொடுங்கள் . பிறகு இதை பற்றி பேசலாம் என்கிற குரல் எங்கேயோ கேட்கிறது.   நம்புங்கள் ....  நம்பிக்கை தான் வாழ்க்கை.   
Source :  Gizmag News

வியாழன், அக்டோபர் 13, 2011

இக்லூ வீட்டில் தங்க வேண்டுமா ? - ஒரு சிறப்பு பார்வை


பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் இக்லூ என்ற வீட்டில் வசிப்பார்கள் என்று சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் படித்த நியாபகம்.  அப்படி ஒரு அனுபவத்திற்காக ஏங்கிய நாட்களும் உண்டு.    உண்மையில் இப்படி ஒரு பனிப்பிரதேசத்தின் இரவை கழிப்பதற்காக இக்லூ போன்ற தங்கும் அறைகளை அமைத்துள்ளது Kakslauttanen என்ற  ஹோட்டல் .    பின்லாந்திற்க்கு  அடுத்துள்ள ஆர்டிக் பிரதேசமான Urho Kekkonen National பார்க் ல் தான் இந்த இக்லூ அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


இங்கு 20  கண்ணாடியால் ஆன இக்லூ வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.   உறைந்து போவதில் இருந்து பாதுகாக்கவும் ,  மிதமான வெப்பத்தை வீட்டின் உள்ளே நிலைப்படுத்தவும் இந்த வீடு முழுவதும் விசேஷித்த வெப்ப கண்ணாடிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.   இதனால் அதிகபட்சமாக மைனஸ் 30  டிகிரி செல்சியஸ் வரையிலும் இந்த வீட்டின் உள்ளே தங்கி இருந்து இயற்கை அழகை ரசிக்க முடியும். 


இந்த இடத்தில ஐஸ் கட்டியில் செய்த ஒரு உணவகமும் ,  விருந்தினர்கள் பொழுது போக்கிற்காக ஐஸ் பிஷிங்  மற்றும் பனிமான் வண்டியில் சவாரி போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.  2012 ம் வருடம் இன்னும் 33  இக்லூ வீடுகளை இந்த இக்லூ கிராமத்தில் உருவாக்க திட்டம் உள்ளதாம்.


டிஸ்கி :  யாரோ வேக வேகமாக இப்பொழுதே புறப்படுகிறது போல தோன்றுகிறது.  கொஞ்சம் பொறுங்கள்  டிசம்பர் மாத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரைக்கும் தான் இந்த இக்லூ கிராமத்தில் தங்கும் வசதியாம்.  போய் விட்டு வந்தவுடன் உங்கள் அனுபவத்தை கொஞ்சம் எழுதுங்களேன்.

Source  :  http://www.kakslauttanen.fi/en

புதன், அக்டோபர் 12, 2011

ஹெல்மெட்டில் மின்சாரம் - ஒரு சுவாரசிய தகவல்


இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் ( அதாங்க HELMET ) அணிய வேண்டும் என்று எத்தனை முறை அரசாங்கம் சொன்னாலும் அதெல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்காமல் ஹாயாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் நம் அநேகர் மத்தியில் பிரக்னேஷ் மற்றும் அலோக் பட் என்ற இரண்டு மாணவர்களும் வித்தியாசமானவர்கள்.  அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைகழகத்தில் பயிலும் இவர்கள் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர்.



ஹெல்மெட்டை செல் போன் ( அலை பேசி )  சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்த முடியும் என்கிறது இந்த மாணவர் குழு.   சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி 40  நிமிடங்களுக்குள் ஒரு அலைபேசிக்கு தேவையான மின்சாரத்தை தயார் செய்ய முடியும் என்பதே அந்த கண்டுபிடிப்பு.   இந்த கண்டுபிடிப்பின் மூலம் தலைக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகமாகும் என எதிர்பார்க்க படுவதால் விபத்துகள் மூலம் உயிர் இழப்பு கணிசமாக குறையவும் வாய்ப்புள்ளது.  அட ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...!   மிக குறைந்த விலையில் அதாவது 1000  ரூபாயில் இந்த தலைக் கவசத்தை கொடுக்க முடியும் என்கிறார்கள் இந்த மாணவ கண்டுபிடிப்பாளர்கள்.    வாழ்த்துகள் நண்பர்களே ....



செவ்வாய், அக்டோபர் 11, 2011

வெப்பக் காற்று எரிபொருளாகுமா ? - ஒரு ஆராய்ச்சி தகவல்


நல்ல உஷ்ணமான காலங்களில் வெப்பமான காற்று உயரே எழும்புவதை நாம் எல்லாரும் கவனித்திருக்க முடியும்.  இதற்க்கு பெரிய அறிவியல் விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை என நினைக்கிறேன்.   இந்த சாதாரணமாக நிகழும் காரியத்தை நாம் எதிர்காலத்திற்கு பயன்படுத்தினால் என்ன என்று யோசித்ததின் விளைவு தான் இந்த ஆராய்ச்சி. 
 
 
 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஜெர் என்ற ஆரய்ச்சியாளர் இந்த செயலை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார்.  இதன்படி அரிசோனா பாலைவனத்தில் 2600 அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரத்தை கட்ட திட்டமிட்டுள்ளார்.  அந்த கோபுரத்தின் உள் பகுதியில் 32  விசையாழிகள் ( Turbine ) பொருத்தப்பட்டிருக்கும்.  வெப்பமான காற்று கோபுரத்தின் உள் மேல் எழும்பும் போது விசையாழிகள் சுற்றப்படுவதால் இயந்திர ஆற்றல் உருவாக்கப்பட்டு மின்  தோற்றிகள் ( Generators  ) மூலம் மின் ஆற்றல் தயாரிக்கலாம் என இந்த ஆராய்ச்சி சொல்லுகிறது.
 
 
இந்த வெப்பக் காற்று கோபுரங்கள்  மூலம் குறைந்தது   200   MWe  மின்சாரம்  தயாரிக்கமுடியும்  என கூறுகிறது என்விரோ மிஷன் என்ற அவரது நிறுவனம்.   இந்த  கோபுரம்  கட்டப்பட்டால்  உலகின்  இரண்டாவது  உயரமான அமைப்பு என்ற பெயரை பெறுவதுடன் ,  இதை  கட்டி  முடிக்க  சுமார்    750   மில்லியன்  டாலர்  செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
 
 
2600  அடி உயரமான ஒரு கோபுரத்தை பாலைவனத்தில் கட்டுவது ஒரு கடினமான காரியம் என்பதும் ,  இந்த திட்டம் இன்னும் ஆராய்ச்சி வடிவத்தில் தான் இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.   எப்போது இந்த திட்டம் செயல்படுப்படும் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் பசுமையான இந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டியது தான். 
 
நன்றி : CNN நியூஸ் 
 
 
 

திங்கள், அக்டோபர் 10, 2011

உலகின் பழமையான கார் - விலையோ 23 கோடி - ஒரு சுவாரசிய தகவல்


உலகின் மிக பழமையான 127  வயதுள்ள ( அதாங்க 127  வருசத்துக்கு முன் உருவாக்கப்பட்டது )  ஒரு கார் யாரும் எதிர்பாராத அதிகபட்ச தொகைக்கு அதாவது 4 . 6  மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 23  கோடி )  ஏலம் போனது ஒரு வியப்பூட்டும் விஷயம் அல்லவா ..!
 
 
 
 
1884 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த De Dion Bouton  கார் கடந்த வெள்ளி கிழமை RM AUCTIONS என்ற பிரபல ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.   5 லட்சம் டாலர் என்று ஆரம்பிக்கப்பட்ட ஏலம் குறைந்தது 25 லட்சம் டாலர் வரை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணமாக 46 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டது.
 
 
நீராவியில் இயங்கும் இந்த கார் இன்று வரை ஓடும் திறனுடையதாய் இருப்பது இதன் சிறப்பம்சம்.   இது வரையிலும் இந்த காரை 4  பேர்தான் உபயோகப்படுத்தியுள்ளர்கள் என்பது கூடுதல் தகவல்.   இந்த விலைக்கு இந்த காரை வாங்கின மகராசன் பேரை மட்டும் இது வரை யாரும் சொல்லவில்லை.
 
 
டிஸ்கி :  இதான் ஓல்ட் இஸ் கோல்டோ ..?
 
 

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

தண்ணீர் இல்லை ௦- அவசர நிலை பிரகடனம் - ஒரு பகீர் ரிப்போர்ட்


ஒன்பது சிறிய தீவுகள் நிறைந்த TUVALU என்ற சிறிய நாடு பசுபிக் பிரதேசத்தில் உள்ளது.  நாலாப்புறமும் கடலால் சூழப்பட்ட இந்த தீவு 25 .63  ச.கிமீ பரப்பளவு உடையது.  சுமார் 10000 பேர் குடியிருக்கிறார்கள்.   இந்த தீவு மிக பெரிய ஒரு சவாலை சந்தித்திருக்கிறது.   குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் அந்த குட்டி நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுளது என்பது பெரும் அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். 
 
 (குட்டிதீவின் அழகிய தோற்றம்)

கடல் மட்டத்தில் இருந்து 5  மீ உயரத்தில் இருக்கும் இந்த குட்டி நாடு மாறி வரும் பருவ சூழ்நிலைகளால் கடல் மட்டம் பெருகி வருவதால் தன்னுடைய குடிநீரை இழந்திருக்கிறது.    தற்பொழுது இந்த குட்டி நாட்டில் ரேசன் முறையில் நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  அதாவது தலை நகரான Funafuti ல் வசிப்பவர்களுக்கு இரண்டு வாளி தண்ணீர் வழங்கப்படுகிறது.  அதுவும் இன்னும் சில நாட்களுக்கு மட்டும் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது

இதே போன்ற பருவ மாறுபாடுகளினால் கடல் மட்டம் உயருவதினால் பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள அநேகம் குட்டி நாடுகளுக்கு இந்த நிலை வரும் காலம் சீக்கிரத்தில் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு :  தண்ணீர் இல்லாமல் வாடும் அந்த குட்டி நாட்டுக்காக ஒரு நிமிடம் நாம் பிரார்த்தனை செய்வோம்.   இது நம் எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை.  வெகு வேகமாக உலகம் வெப்பமடைந்து வருகிறது.  இன்னும் கொஞ்ச காலத்தில் நல்ல தண்ணீர் இல்லாத ஒரு உலகத்தில் பிரவேசிக்க போகிறோம் என நினைக்கவே அச்சமாக உள்ளது.  இதை தடுக்க நாம் என்ன செய்யலாம்.  
 
1 .  வீட்டிற்க்கொரு மரம் வளர்ப்போம்.
2 .  கூடுமான மட்டும் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
3 .  மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாப்போம்.
4 .  நல்ல தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்