சனி, அக்டோபர் 29, 2011

மழைகாலத்தில் ஒரு பாட்டி - ஒரு உண்மை சம்பவம்


காலை நேரம் .. வேகமாக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தேன் .  நல்ல மழைக்கு உபயோகபடுத்தும் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு என் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டேன்.   மழைகாலமாய் இருந்தபடியால் ரோட்டில் வாகனங்கள் அதிகமில்லை .  இருப்பினும் சறுக்கி விடும் என்ற காரணத்தால் நானுன் வேகமாக செல்லவில்லை.

ஒரு நேரான ரோட்டில் செல்லும்போது , கொஞ்சம் வேகத்தை கூட்டினேன் .   ஹெல்மெட் அணிந்திருந்தாலும் போகும் வரும் ஜனங்களை பார்த்துகொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்தேன் .   தொலை தூரத்தில் ,  நடுரோட்டில் தலையில் சிறு சுமையுடன் யாரோ நடப்பது தெரிந்தது.   அருகில் ஊர் ஒன்றும் இல்லாதபோது ,  இந்த ரோட்டில் ,  இந்த மலையில் நடப்பது யார் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே எனது வாகனம் அவர்களை சமீபித்தது.
அருகில் சென்று உற்று நோக்கியபோது தான் கவனித்தேன் .  அது ஒரு பாட்டி என்று .   ஐயோ பாவம் ,  இவர்களை நாம் ஏன் வீட்டில் விடகூடாது என நான் நினைத்தபோது எனது வாகனம் கொஞ்சம் முன்னால் சென்றுவிட்டதை உணர்ந்தேன் .  எனது பைக்கை திருப்பிக்கொண்டு அவர்கள் அருகில் நிறுத்தினேன்.

பாட்டி என்று கூப்பிட்டேன் .   என்னை நிமிர்ந்து பார்த்தார்கள் .  ஒரு 70  வயது இருக்கும் .  நரைத்து போன முடிகள் மழைநீரில் ஒட்டிக்கிடந்தன.   கன்னங்கள் குழிவிழுந்து ,  சுருக்கத்தினால் முகம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க ,  கைகள் மட்டும் நடுங்கி கொண்டேயிருந்தது.   மேலே என்ன சுமை என்று பார்த்தபோது கொஞ்சம் விளக்குமாறு ( Broom to Sweep )  கட்டு அவர்கள் தலையில் இருந்தது.    பாட்டி என் பைக்கில் ஏறுங்கள்.  உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று நான் கேட்டபோது என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் ...  

அப்பா ...!  ஒரு விளக்குமாறு வாங்கிறாயா ...?   நான் சொன்னேன் "  பாட்டி  விளக்குமாறு வேண்டாம் ,  இந்த மழையில் நீங்கள் நடக்கவேண்டாம் , என் பைக்கில் ஏறுங்கள் ,  உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன் ".   பட்டி சொன்னார்கள் ,  "  அப்பா ... ஒரு விளக்குமாறு வாங்கிக்கொள் ..  தினமும் ஒரு விளகுமாறாவது விற்றால்தான் என்னால் சாப்பிடமுடியும் .  எங்க வீட்டுக்காரர் செத்துபோய் பல வருஷம் ஆச்சு ... பிள்ளை குட்டிங்க ஒன்னும் இல்லை .  இந்தா ...பக்கத்துக்கு ஊருக்கு போய் விளக்குமாறு விக்கத்தான் போனேன் .  ஆனா மழை பார்த்தியா ... ஒன்னு கூட விக்கலே ...  நான் கஞ்சி குடிச்சு ரெண்டு நாளாச்சு ... ஒரு விளக்குமாறு வாங்கிறியா...?
கொஞ்சம் அதிர்ந்தும் அதிகம் உடைந்தும் போனேன் .   பாட்டி வைத்திருந்த விளக்குமாறு வாங்கி எங்க வீட்டில் பயன்படுத்த முடியாததால் ,  பர்சை திறந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தேன் .   கொட்டும் மழையிலும் ,  வருத்திய பசியிலும்  பணம் வாங்க மறுத்த அவர்களை கொஞ்சம் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை அவர்கள் கையில் திணித்தேன் ...   

பணத்தை வாங்கி கொண்டு என்னை பார்த்து சொன்னார்கள் , " அப்பா ... உன் பிள்ளைங்க குட்டிங்க எல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கும் " .   மழைத் தண்ணீரோடு என் கண்ணில் நீர் வழிந்தததை அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை .   ஆனால் கடைசி வரை என் பைக்கில் ஏறவே இல்லை .  மழையோடும் சுமையோடும் நடந்து சென்ற அந்த பாட்டியை வெகுநேரம் மழையில் நனைந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தேன் .

 
வீட்டிற்கு வந்து தலையை துவட்டி விட்டு படுக்கையில் படுத்தபோதும்  இன்னும் அந்த பஞ்சுதலையும் , வெகுளி பேச்சும் , ஏங்கிய கண்களும் என் கண்களுக்கு முன்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.   அந்த பாட்டி எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் நான் கேட்க மறந்து விட்டேன் .   கடவுளே ....! எப்படியாவது அந்த பாட்டியை கடைசிவரையும் காப்பாற்றும் என வேண்டிக்கொள்ள தான் என்னால் முடிந்தது.


Related post



4 கருத்துகள்: